தர்மபுரி அருகே சுக்கு காபி வியாபாரி மர்ம சாவு

Update: 2023-02-20 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே சுக்கு காபி வியாபாரி தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்கில் வியாபாரி பிணம்

தர்மபுரி மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 42). இவர் தர்மபுரி பஸ் நிலையத்தில் சுக்கு காபி விற்பனை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிந்தன் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றார்.

ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் செம்மாண்டகுப்பம் அருகே சனத்குமார் நதி ஓடையின் ஓரத்தில் உள்ள மரத்தில் கோவிந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிந்தனின் இறப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை. அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்