பாரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பிளஸ்-1 மாணவர் பரிதாப சாவு-உறவினர்கள் சாலை மறியல்

Update: 2022-11-04 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

பாரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யக்கோரி மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிளஸ்-1 மாணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பண்ணந்தூர் அருகே உள்ள அப்புகொட்டாயை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் தனுஷ் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாணவர் தனுஷ் மோட்டார் சைக்கிளில் பண்ணந்தூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, இந்திரா நகரை சேர்ந்த சிவபாரத் (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், தனுஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி மீதும் மோதியது.

பலி

இந்த விபத்தில் பிளஸ்-1 மாணவர் தனுஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சிவபாரத், பண்ணந்தூர் அருகே உள்ள தர்மந்தோப்பு பகுதியை சேர்ந்த புதுயுகம் (45), கவுரம்மாள் (42) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவபாரத் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கும், புதுயுகம், கவுரம்மாள் ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

விபத்து குறித்து தகவல் அறிந்த தனுசின் உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் தனுசின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது பாரூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். இதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து தனுசின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய சிவபாரத்தை கைது செய்தால் தான் உடலை எடுக்க அனுமதிப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பண்ணந்தூர்-தட்ரஅள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் (பொறுப்பு), ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை

மேலும் உரிய விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானமடைந்த தனுசின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து தனுசின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்