மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 வசூல்; ஆடிப்போன அடுக்குமாடி வாசிகள்

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மோட்டார்கள், கார் நிறுத்தம், படிக்கட்டுகள் மற்றும் பொது இடங்களில் எரியும் மின்விளக்குகள், எந்திர 'லிப்ட்'கள் போன்றவைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இது கடுமையாக இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

Update: 2022-12-08 18:51 GMT

மின்சாரக்கட்டண உயர்வு

புதிய மின்சாரக் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. நாம் கட்டுகிற மின்சாரக் கட்டணம், நமக்கு அரசு தருகிற மானியம் ஆகியவை மூலமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

மின்சாரம் கொள்முதல் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது போன்ற செலவினங்களுக்காக மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.77 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

இவ்வாறு வரவுக்கு மீறி செலவாகி வருவதால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் மின்வாரியம், சற்று அதில் இருந்து மீளுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே முன்வந்து, 15 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன்பின்னர், எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் புதிய மின் கட்டணத்தை 34 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த புதிய மின்கட்டண உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பதிவாகும் யூனிட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட இந்த புதிய மின் கட்டணம் பொருந்தும்.

இதனால் முன்பு இருந்த கட்டணத்தைவிட, குறைந்தது ரூ.100 முதல் ரூ.1,000-க்கு மேல் ஒவ்வொருவரும் அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

அடுக்குமாடி வாசிகள் ஆதங்கம்

இதில் இன்னும் ஒருபடி மேலாக, பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பைக் கொண்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சிதரும் வகையில் கட்டண உயர்வு அமைந்து இருக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் ஆதங்கத்தில் உள்ளனர்.

அரியலூர், பெரம்பலூர் உள்பட மாநிலம் முழுவதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்ட அறை, வாகன நிறுத்தங்கள், 'லிப்ட்', குடிநீர் மோட்டார் பம்ப், 'ஜிம்' போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மின் கட்டண உயர்வு வரும் வரை, இதுபோன்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு, வீடுகள் போன்றே ஒரே சீரான மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, முதல் 100 யூனிட் இலவசம். 500 யூனிட் வரை மானியக் கட்டணம் என்ற சலுகைகள் கிடைத்தன.

தற்போது இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டு, வணிக ரீதியிலான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுவரைப் பொதுப்பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் இருந்து வந்த நிலை மாறி, தற்போது வீடுகளுக்கான கட்டணத்துடன் கூடுதலாக இதையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலைக்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வந்து இருக்கிறார்கள்.

இதில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சாதாரண மின் இணைப்புகளைக் கூட பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளாகக் கருதி, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாயாகக் கணக்கிட்டு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடும் எதிர்ப்பு

இதற்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இதற்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்ற மாயை இருக்கிறது. அவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் பெற்று அதை ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு செலுத்திவருபவர்கள் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்த கட்டண உயர்வால் அவர்கள் மாதம் மாதம் செலுத்தும் பராமரிப்பு செலவு கடுமையாக அதிகரித்து அவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இதுபற்றி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறியதாவது:-

சொத்து வரி உயர்வு

அரியலூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் லைப்ரரியனாக பணிபுரியும் விஸ்வநாதன்:- கடந்த 2 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். இதற்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் செலுத்தி வருகிறேன். தற்போது மின் கட்டண உயர்வால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் சிரமப்பட வேண்டி உள்ளது. வீட்டு உரிமையாளரிடம் கேட்டால் அரசு மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தி விட்டனர் என கூறுகின்றனர் இதனால் பாதிக்கப்படுவது எங்களைப்போன்ற வாடகையில் குடியிருப்பவர்களே.

கூடுதல் நிதிசுமை

தா.பழூரை சேர்ந்த மருதமுத்து:- மின் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடுமையான நிதி சுமையை ஏற்படுத்தியுள்ளது. சொந்த வீடு இல்லாமல் அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்பவர்கள் தற்போது கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. கொரோனா காலத்துக்கு பிறகு பலர் வேலையின்றி சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அரசு கருணை உள்ளத்தோடு மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

ரத்து செய்ய வேண்டும்

அரியலூரை சேர்ந்த சங்கர்:- மக்களுடைய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கணிசமாக விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலிலே மின்கட்டணத்தை பார்க்கின்ற பொழுது மிகுந்த அச்சத்தை அளிக்கிறது. மின் கட்டணம் தற்போது 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. எனவே தமிழக அரசு மறு பரிசீலனை செய்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் மின் கட்டணத்தை மாதம் மாதம் செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்வது தவறு. மின்வாரியத்தின் வருவாய் சரியாக அரசிடம் வந்து சேர்ந்தால், நஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. தற்போது பொதுப் பயன்பாட்டு மின் கட்டணம் நடைமுறைக்கு வந்திருப்பதால், மின்வாரியத்துக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை குறைந்தபட்சம் ரூ.15 கோடியும், அதிகபட்சம் ரூ.50 முதல் ரூ.54 கோடியும் வருவாய் கிடைக்கும். இதுதவிர, நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரும் வருவாயும் தனியாக வரும். இது அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருக்கும் நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதிக்கும். ஏராளமான வீடுகள் கொண்ட சில அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தக் கட்டண உயர்வால், பராமரிப்பு செலவை ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் அதிகரித்துவிட்டனர்' என்று தெரிவித்தனர்.

சென்னை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்ல சிறு நகரங்களில்கூட அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. குழுக்களாக வீடுகள் கட்டி வாடகைக்கும் விடுகிறார்கள். இந்த புதிய மின்கட்டண முறையால் அங்கு குடியிருக்கும் வாடகைதாரர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்