டாஸ்மார்க் கடை சுவரில் துளையிட்டு பீர் பாட்டில்கள் திருட்டு

காட்பாடி காங்கேயநல்லூரில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் பீர்பாட்டில்களை திருடிச்சென்றுவிட்டனர்.

Update: 2022-10-30 12:20 GMT

காட்பாடி காங்கேயநல்லூரில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் பீர்பாட்டில்களை திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை சுவரில் துளை

காட்பாடி காங்கேயநல்லூரில் அரசு உயர்ரக மதுபான விற்பனை கடை (எலைட்) உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளர்களாக புகழேந்தி, சங்கர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் மேலும் 3 விற்பனையாளர்கள் வேலை பார்க்கிறார்கள். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் புகழேந்தி டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை புகழேந்தியின் செல்போனில் பார்க்கும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்தநாள் காலை கண்காணிப்பு கேமராவின் இணைப்பு செயல்படவில்லை. இதையடுத்து சிறிதுநேரத்தில் புகழேந்தி, சங்கருடன் சென்று டாஸ்மாக் கடையை திறந்து பார்த்தார். அங்கு கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டிருந்தது.

பீர் பாட்டில்கள் திருட்டு

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து டாஸ்மாக் மேலாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் முந்தையநாள் இரவில் கடையில் இருந்த மது, பீர்பாட்டில்களின் இருப்பை சோதனை செய்தனர். அப்போது கடையில் வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பீர்பாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த விருதம்பட்டு போலீசார் டாஸ்மாக் கடையை பார்வையிட்டு மேற்பார்வையளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் பதிவாகும் ஹார்டிஸ்கை ஆய்வு செய்ய போலீசார் முயன்றனர். அப்போது பீர்பாட்டில்களை திருடிய மர்மநபர்கள் அதனையும் எடுத்து சென்றது தெரிய வந்தது.

3-வது முறையாக...

டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய மர்மநபர்களின் உருவங்கள் அந்த பகுதியில் உள்ள வீடு, கடைகளின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில் ஏற்கனவே 2 முறை திருட்டு போய் இருக்கிறது. இது 3-வது முறையாக மது, பீர்பாட்டில்கள் திருட்டு போய் உள்ளது. எனவே இரவு நேரத்தில் போலீசார் இந்த பகுதியில் கூடுதலாக ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்