ஆபத்தான ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா?

திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-22 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரேஷன் கடை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி ரேஷன் கடை உள்ளது. இந்த கடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்டது. இந்த கடை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கடையில் அந்த பகுதியை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.

ஆபத்தான நிலையில் காணப்படுகிறது

இந்த நிலையில் ரேஷன் கடை கட்டிடம் 1 ஆண்டுக்கு மேலாக சேதமடைந்து கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

இதனால் அருகில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் ரேஷன் கடை கடந்த 1 ஆண்டாக தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த பழைய கட்டிடத்தை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதன் காரணமாக ஊராட்சி சேவை மையம் மூடக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதிதாக கட்ட வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள ரேஷன் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்