உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலையோர கிணறு
ஊதியூர் அருகே சாலையோர கிணறு தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உயிர்பலி வாங்க காத்திருக்கிறது. அதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம்
ஊதியூர் அருகே சாலையோர கிணறு தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உயிர்பலி வாங்க காத்திருக்கிறது. அதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையோர கிணறு
ஈரோடு, நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு காங்கயம் -தாராபுரம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அதுபோன்று அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதனால் காங்கயம்- தாராபுரம் ரோட்டில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் ஊதியூர் அருகே உள்ள இச்சிப்பட்டியில் சாலை ஓரத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அதில் ரோட்டில் செல்லும் வாகனங்கள் விழுந்துவிடாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இதனால் வாகனங்கள் அந்த ரோட்டில் பாதுகாப்பாக சென்றுவந்தன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த தடுப்பு சுவரில் வாகனம் ஒன்று மோதியதில் சேதமடைந்தது.
விபத்துகள் ஏற்படும் அபாயம்
இதனால் இரவு நேரங்களில் ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள் அந்த சேதமான சுவரில் மோதினால் கிணற்றுக்குள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் பழனி பாதயாத்திரைக்கு பக்தர்கள் வரும்போது ரோட்டில் வாகனங்கள் செல்ல குறைவான இடமே இருக்கும். அப்போது அந்த இடத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படலாம்.
இதனால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் அந்த கிணற்றின் அருகே உள்ள சேதமடைந்த தடுப்பு சுவரை சரிசெய்வதோடு, அந்த சுவற்றை சற்று உயரம் அதிகரித்து கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.