சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்; நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மனு
சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
கூட்டம்
நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
இதில் மாநகரை சேர்ந்த ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
பா.ஜனதா ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செலாளர் அருள்ராஜ் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், ''வ.உ.சி. குருபூஜை வருகிற 18-ந்தேதி டவுன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இங்கு ஏராளமானோர் மரியாதை செலுத்த வருவார்கள். எனவே அங்கு குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
குடிநீர் வினியோகம்
53-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தலைமையில் நகர் நலச்சங்க நிர்வாகி நல்லபெருமாள் மற்றும் அந்த வார்டு மக்கள் அளித்த மனுவில், ''எழில்நகரில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி மூலம் 53, 54-வது வார்டுகளுக்கு ஒரு நாள் விட்டு 1 நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு தண்ணீர் வினியோக குழப்பத்தால் பல தெருக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. நியூ காலனி, அய்யப்பா நகர் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் குறைவாக உள்ளது. எனவே வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வால்வுகளை மாற்றி குடிநீர் வினியோகத்தை சீரமைக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
ரோடு வசதி
வண்ணார்பேட்டை வெற்றி வேலடி விநாயகர் கோவில் கிழக்கு பகுதி மக்கள் கொடுத்த மனுவில், தங்களது பகுதியில் கழிவுநீரோடையுடன் புதிய சாலை அமைத்து தரவேண்டும்'' என்று கேட்டிருந்தனர்.
தென்பத்து பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கொடுத்த மனுவில், ''தென்பத்து பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தரவேண்டும்'' என்று கூறப்பட்டு உள்ளது.
டவுனை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கொடுத்த மனுவில், ''டவுன் செண்பகம்பிள்ளை இரட்டை தெருவில் கழிவுநீரோடையில் ஆக்கிமிரத்து இருக்கும் செங்கல், மண் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்'' என்று கூறி உள்ளார்.
ஓடை தூர்வாருதல்
இதே போல் பல்வேறு பகுதி மக்கள் குடிநீர், ரோடு சீரமைப்பு, கழிவுநீர் ஓடைகள் தூர்வாருதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். மேயர் அந்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வழங்கி உத்தரவிட்டார். கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்ஷா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.