கொடைக்கானலில் மலைப்பாதைகளில் சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடிகள்
கொடைக்கானலில் மலைப்பாதைகளில் குவிலென்ஸ் கண்ணாடிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானல் செல்வதற்கு வத்தலக்குண்டு-கொடைக்கானல், பழனி-கொடைக்கானல் ஆகிய 2 பிரதான மலைப்பாதைகள் உள்ளன. இந்த மலைப்பாதைகள் வழியாக சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த மலைப்பாதைகளின் கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் செல்லும்போது வாகன டிரைவர்களின் முன்னெச்சரிக்கைக்காக குவிலென்ஸ் கண்ணாடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளில் மலைப்பாதைகளில் அமைக்கப்பட்டிருந்த குவிலென்ஸ் கண்ணாடிகள் முழுவதும் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதுடன், பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளின் வளைவுகளில் குவிலென்ஸ் கண்ணாடிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் மலைப்பாதைகளில் உள்ள வளைவுகளில் செல்லும் வாகன டிரைவர்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் குவிலென்ஸ் கண்ணாடிகள் இல்லாததால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் மலைப்பாதைகளில் சேதமடைந்து காணப்படும் குவிலென்ஸ் கண்ணாடிகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.