சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-27 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகம் கிராமத்தில் அப்பகுதியில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக மேல் நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்தது காணப்படுகிறது. தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

சிமெண்டு காரைகள் பெயர்ந்துள்ளது

மேலும் மேல்பகுதியில் தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் தளம் முழுவதும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதன் காரைகள் குடிநீரில் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சிமெண்ட் காரைகளுடன் வருவதாக அந்த பகுதியினர் தெரிவிக்கின்றனர். மேல்நிலை குடிநீர் தொட்டியில் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. தொட்டியின் மேல் ஏறுவதற்கு அமைக்கப்பட்ட இரும்பு ஏணி துருப்பிடித்து உள்ளது.

சீரமைக்க வேண்டும்

குடிநீர் தொட்டி சேதமடைந்து உள்ளதால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்