வடக்கு பனையனாற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் பாலம்

கூத்தாநல்லூர் அருகே, ஓகைப்பேரையூரில் வடக்கு பனையனாற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் பாலம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-05-29 12:16 GMT

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே, ஓகைப்பேரையூரில் வடக்கு பனையனாற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் பாலம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வடக்கு பனையனாறு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் வடக்கு பனையனாற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை ஓகைப்பேரையூர், நாகராஜன்கோட்டகம், ராமானுஜமணலி, வடபாதி, கலிமங்கலம், மூலங்குடி, வடபாதிமங்கலம், வடகட்டளை உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாலத்தை லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினசரி கடந்து செல்கின்றன. இந்த நிலையில் பாலத்தின் ஒரு பக்கம் உள்ள தடுப்புச்சுவர் முழுவதுமாக இடிந்து ஆற்றில் விழுந்து விட்டது.

வலுவிழந்த பாலம்

அதேபோல், பாலத்தின் முகப்பு பகுதியில் இருந்த தடுப்புச்சுவரும் இடிந்து விழுந்து விட்டது. பாலம் வலுவிழந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஒரு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் பலர் பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து உள்ளனர்.

சேதம் அடைந்துள்ள இந்த பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

புதிய பாலம்

பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து விட்டது. பல ஆண்டுகளாக சேதம் அடைந்து காணப்படும் இந்த பாலம் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்து விட்டோம். ஆனாலும் புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, சேதம் அடைந்துள்ள இந்த பாலத்தை உடனடியாக அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்