சரக்கு வேன் மோதி வீட்டின் சுவர் சேதம்
சரக்கு வேன் மோதி வீட்டின் சுவர் சேதமடைந்தது.
உப்பிலியபுரம்:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டி கோம்பை வீதியை சேர்ந்தவர் முரளி(வயது 38). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சாந்தி(34). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சாந்தி விஷம் குடித்ததாக தெரிகிறது. இதனால் ஆபத்தான நிலையில் இருந்த சாந்தியை முரளி தனது சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக துறையூரை நோக்கி சென்றார். அப்போது மழை பெய்தது.
இந்நிலையில் அந்த சரக்கு வேன் நடுப்பட்டியில் வந்தபோது, ஒரு சிறுமி திடீரென சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி மீது மோதாமல் இருக்க, முரளி சரக்கு வேனை திருப்பினார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலை ஓரத்தில் இருந்த இந்திராணி என்பவரது வீட்டின் சுவற்றில் மோதியது. இதில் வீட்டின் சுவர் சேதமடைந்தது. இது குறித்த தகவலின்பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாந்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.