50 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
வைகை அணை நீர்மட்டம் 50 நாட்களாக தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் கடந்த மாதம் முதல் வாரத்தில் வைகை அணையின் நீர்மட்டம், முழுக்கொள்ளளவாக நிர்ணயம் செய்யப்பட்ட 69 அடியை எட்டியது.
மேலும் வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காகவும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வைகை அணையில் இருந்து உபரிநீரும் திறக்கப்பட்டது. எப்போதும் 69 அடியில் நிலைநிறுத்தப்படும் வைகை அணை, இந்த ஆண்டு அதன் உச்ச உயரமான 71 அடிவரையில் தண்ணீர் தேக்கப்பட்டது.
இதற்கிடையே வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட போதும், அணைக்கு போதுமான நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் கடந்த ஒருமாதமாகவே குறையவே இல்லை. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் கடந்த 50 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 70.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,579 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,069 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.