'தினத்தந்தி' செய்தி எதிரொலி:தேனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு காலையில் கூடுதல் அரசு பஸ்

‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தேனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் நலன் கருதி காலை நேரத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-02 18:45 GMT

பங்களாமேடு பஸ் நிறுத்தம்

தேனி பங்களாமேடு, பாரஸ்ட்ரோடு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் ஆண்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்கள் சென்று வருவதற்கு காலை நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லை. காலை 8.40 மணியளவில் வரும் டவுன் பஸ் அடிக்கடி தாமதமாக வந்து சென்றது. அந்த பஸ்சை விட்டால் காலை 9.30 மணிக்கு பிறகு தான் ஆண்டிப்பட்டிக்கு டவுன் பஸ் சேவை உள்ளது.

அவ்வாறு வரும் பஸ்களும் பங்களாமேடு பஸ் நிறுத்தத்தில் நிற்காததால் மாணவிகள் சிரமம் அடைந்து வந்தனர். மேலும், பங்களாமேடு பகுதியில் 8 ஆண்டுகளாக ஒரு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாக இருந்தது. அங்கும் பஸ்கள் நிற்பது இல்லை. இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

கூடுதல் அரசு பஸ்

அதன் எதிரொலியாக பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் தலைமையில், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், ஆணையர் கணேசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று பங்களாமேடு பஸ் நிறுத்தங்களில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, 'காட்சிப் பொருளாக உள்ள பயணிகள் நிழற்குடையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இரு பஸ் நிறுத்தங்களிலும் அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்ல வேண்டும். அவ்வாறு நிற்காத பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கூறினார்.

இதேபோல், மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலை 9 மணியளவில் தேனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்கப்பட உள்ளதாகவும், வழக்கமாக காலை 8.40 மணியளவில் வரும் பஸ் தாமதமின்றி வந்து செல்லும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக புதிய பஸ் நிலையம் பகுதியில் சரவணக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்