தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

Update: 2022-06-07 19:18 GMT


 சாலையை சீரமைப்பார்களா?


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வாணியம்பேட்டையில் இருந்து நாகாலம்மன் நகர் வரை சாலை சீரமைக்கும் பணிக்காக ஒரு மாதத்திற்கு முன்பு பொக்லைன் மூலம் பழைய சாலையை பெயர்த்து ஜல்லிக்கற்களை பரப்பி விட்டனர். சாலையில் ஜல்லிக்கற்கள் பரவி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் எப்போதுதான் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தருவார்களோ என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

-மோகன், அரக்கோணம்.

காட்சி பொருளான தபால் பெட்டி

திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள தபால் அலுவலகம் முன்பு, தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த தபால் பெட்டியில் போடப்படும் தபால்கள் எத்தனை மணிக்கு எடுக்கப்படும் என்ற விவரம் எழுதப்படவில்லை. மேலும் தபால் பெட்டியை திறக்கமுடியாத வகையில் அதை சுற்றி சிமெண்டால் தளம் அமைத்துள்ளனர். இதனால் தபால்பெட்டி காட்சிபொருளாக இருக்கிறது. எனவே தபால் பெட்டியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், திருவண்ணாமலை.

கோட்டை அகழியில் குவியும் குப்பை

வேலூர் கோட்டை அகழியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி நடந்தது. அப்போது அகழியில் இருந்த செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும் மீண்டும் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. அகழியில் உள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், வேலூர்.

மேம்பாலத்தில் மின்விளக்குகள் வேண்டும்

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மா பேட்டை திருத்தணி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் பல ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த சாலையில் இதுவரை மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் மேம்பாலத்தில் மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுஜாதா.அரக்கோணம்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து ஏ கஸ்பா மெயின் ரோடு செல்லும் பாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலை என்பதால் குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிர்வேல், ஆம்பூர்.

செடிகள் அகற்றப்படுமா? 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. அப்பகுதி கிராம மக்கள் காய்ச்சல், தலைவலி, கை கால் வலிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கட்டிடத்தின் மேற்பகுதியில் அரச மரச்செடி வளர்ந்து உள்ளதால் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்தது உள்ளது. எனவே கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள அரசமரச்செடியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கணேசன், சோளிங்கர்.

டயர் எரிப்பதை தடுக்க வேண்டும்

வேலூர் பைபாஸ் ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே பழைய டயர்கள் மற்றும் கழிவுகள் அடிக்கடி தீவைத்து கொளுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் புகையினால் சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன்கருதி டயர்களை எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-குமரன், வேலூர்.

தேங்கிநிற்கும் கழிவுநீரால் பயணிகள் அவதி

ஆம்பூர் பஸ்நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இலவச கழிப்பறை உள்ளது. இங்குள்ள கழிவுநீர் அங்கேயே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் கழிவறைக்குசெல்ல முடியாமல் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்கள் நியமித்து, தினமும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும்.

-மேகன்ராஜ், ஆம்பூர்.

Tags:    

மேலும் செய்திகள்