'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-10-09 19:30 GMT

மரக்கிளைகள் வெட்டப்படுமா?


திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் தீப்பாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நட்டுவைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் அருகே வளர்ந்துள்ள மரத்தின் கிளைகள் வீடுகளுக்கான மின்சார வயர்களுடன் உரசியபடி இருக்கிறது. காற்றில் மரக்கிளைகள் அசையும் போது அந்த வயர்கள் இழுக்கப்பட்டு மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-சவுந்தர், திண்டுக்கல்.


புதர்மண்டி கிடக்கும் கால்வாய்


பழனி பாலசமுத்திரம் 5-வது தெருவில் உள்ள சாக்கடை கால்வாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறமுடியால கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை சுற்றி வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும்.


-ஆனந்த், பழனி.


தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்


வத்தலக்குண்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள், திறந்தநிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசு புழுக்கள் அதிக அளவில் உருவாகின்றன. இதனால் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும்.


-அரசுமைதீன், வத்தலக்குண்டு.


மின்கம்பங்கள் சேதம்


சாணார்பட்டி ஒன்றியம் வத்தலதொப்பம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிவதால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-வல்லடியான், வத்தலதொப்பம்பட்டி.


தெருநாய்கள் தொல்லை


கண்டமனூரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், வீடுகள் முன்பு விளையாடும் சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பினரையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.


-அங்குசாமி, கண்டமனூர்.


மழைநீர் வடிகால் மூடி சேதம்


தேனி பழைய பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகாலின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளால் ஆன மூடி சேதம் அடைந்துள்ளது. பயணிகளின் கால்கள் சிக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது. எனவே இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-சங்கரன், தேனி.


சாலையை சீரமைக்க வேண்டும்


கம்பம் பாரதியார்நகர் தெருவில் குடிநீ்ர் குழாய் பதிக்கும் பணி சாலை தோண்டப்பட்டது. அதன்பிறகு சரியாக சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.


கண்ணன், கம்பம்.




குப்பையால் மாசடையும் தண்ணீர்


பெரியகுளம் வராகநதியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசுகிறது. இதேபோல் தொடர்ந்து குப்பைக்கழிவுகள் வராகநதியில் கொட்டப்பட்டால் நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே குப்பைக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வராகநதியையும் சுத்தப்படுத்த வேண்டும்.


-ராஜன், பெரியகுளம்.


------------------


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Tags:    

மேலும் செய்திகள்