தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-09-01 13:36 GMT

குப்பைகள் அகற்றப்பட்டது

அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

புதர் அகற்றப்படுமா?

மணவாளக்குறிச்சி சந்திப்பில் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெட்டி உள்ளது. இதனை சரியாக பராமரிக்காததால் சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர்களாக மாறி வருகிறது. எனவே, செடிகளை அகற்றி தொலைத்தொடர்பு இணைப்பு கருவிகளை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-கோ. ராஜேஷ் கோபால்,

மணவாளக்குறிச்சி.

சுகாதார சீர்கேடு

திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மீன்சந்தை வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவறையை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விஜு, புதூர்.

தடுப்பு சுவர் வேண்டும்

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மீன்சந்தையில் இருந்து வளநகர் செல்லும் சாலையில் செங்குளம் உள்ளது. இந்த குளம் நிரம்பும் போது வெளியேறும் மறுகால் தண்ணீர் சாலையை கடந்து செல்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையில் தடுப்பு சுவர்கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜஸ்டின், அழகப்பபுரம்.

எரியாத மின்விளக்குகள்

தக்கலை அருகே உள்ள மணலி சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 விளக்குகள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிகிறது. ஒரு விளக்கு அணைந்து, அணைந்து எரிகிறது. பிற விளக்குகள் சுத்தமாக எரிவதில்லை. இதனால், அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, எரியாத மின்விளக்குகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாஹிர், தக்கலை.

புதர் காடாக மாறும் விளைநிலம்

குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பத்தறை ஏலாவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது இந்த ஏலாவில் இருந்து உபரிநீர் வெளியேறும் வடிகால் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வெளியேற முடியாமல் ஏலாவில் தேங்கி நிற்பதால் வயல்வெளி முழுவதும் புதைகுழிகளாக மாறி வருகிறது. மேலும், புதர்கள் வளர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வயல்வெளியில் இருந்து உபரிநீர் வெளியேற தகுந்த வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, பத்தறை.

Tags:    

மேலும் செய்திகள்