'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-28 12:59 GMT

குவிந்து கிடக்கும் கழிவுகள்

பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் மெயின்ரோட்டில் ஊஞ்சவேலம்பட்டி உள்ளது. இங்கு பல்வேறு இடங்களிலிருந்து கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டப்படுகிறது. இதனால் கழிவுகள் தற்போது குவிந்து மலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன், கட்டிட கழிவுகளிலிருந்து வெளியேறும் தூசுகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் கண்ணில் படுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறுகிறார்கள். மேலும் விபத்துகளும் நடக்கிறது. எனவே, ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சரவணக்குமார், பொள்ளாச்சி.

காட்டுப்பன்றிகள் தொல்லை

கோவை காருண்யா நகர் ஈடன் கார்டன் மற்றும் ஆர்.எம்.ஆர். கார்டன் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான காட்டுப்பன்றிகள் உலா வருகின்றன. மேலும் ஒருசில நேரங்களில் காட்டுப்பன்றிகள் பொதுமக்களை துரத்துகிறது. மேலும் ஒருசிலர் காட்டுப்பன்றிகளின் தாக்குதலால் படுகாயம் அடைந்து உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேவர அச்சப்படுகிறார்கள். எனவே வனஊழியர்கள் காட்டுப்பன்றிகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவின்ரக்சன், கோவை.

குப்பைத்தொட்டிகள் வேண்டும்

கோவை வரதராஜபுரம் மெயின் ரோடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் ஒரு குப்பைத்தொட்டி மையம் மட்டும் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் குப்பைகள் நிறைந்தால் சிதறி கிழே குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், குப்பைகளை அவ்வப்போது அகற்றாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதோடு, கூடுதலாக குப்பைத்தொட்டி வைக்க முன்வரவேண்டும்.

ஐஸ்வர்யா, கோவை.

வீணாகும் குடிநீர்

கோவை- தடாகம் ரோட்டில் சிறுவாணி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் வீணாக செல்கிறது. மேலும் அந்த குடிநீர் குழாய் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் காணப்படுகிறது. தண்ணீர் வீணாக செல்வதால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் சாலையும் பழுதடைய வாய்ப்பு உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், கோவை.

முட்புதர்கள் அகற்றப்படுமா?

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 12-வது வார்டான சின்னவேடம்பட்டி பகுதியில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனை சுற்றி முட்புதர்கள் மற்றும் செடி-கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் அதன் அருகே செல்லும் குடிநீர் குழாயும் உடைந்து உள்ளது. இதனால் தண்ணீரும் வீணாக செல்கிறது. இதேபோல் அந்தப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியும் பழுதடைந்து ஆபத்தாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முட்புதர்களை அகற்றுவதோடு, குடிநீர் குழாயை சீரமைக்க முன்வருவார்களா?

மோகன், சின்னவேடம்பட்டி.

பயணிகள் அவதி

ஊட்டியில் இருந்து கோவைக்கு தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருசில பஸ்கள் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பஸ்களில் மேற்கூரையில் ஓட்டைகள் உள்ளன. இதனால் மழை பெய்யும் போது அதன் வழியாக தண்ணீர் ஒழுகுகிறது. அதேபோல் நேற்று பெய்த மழையின் காரணமாக ஒரு பஸ்சில் மழைநீர் ஒழுகியது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கோவையில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் பழுதடைந்த பஸ்களை சீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.

சிவசுப்பிரமணியன், ஊட்டி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கோவை துடியலூர் பகுதியில் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் கழிவுநீர் செல்லாமல் சாக்கடைகளில் பல நாட்கள் தேங்கி நிற்கிறது. இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழழகன், துடியலூர்.

பொதுமக்கள் அச்சம்

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு, ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அந்த வழியாக சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை விரட்டுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சிக்கு வருபவர்களையும் துரத்துகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் ஒருசில நேரங்களில் பொதுமக்களை கடித்து விடுகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராமன், கோவை.

Tags:    

மேலும் செய்திகள்