தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கால்வாயில் முளைத்துள்ள செடி-கொடிகளை அகற்ற கோரிக்கை
கரூர் மாவட்டம், நடையனூர் மெயின் ரோடு அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் பின்புறம் வழியாக உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் ஏராளமான செடி ,கொடிகள் முளைத்து தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தேங்கிய தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நடையனூர்.
பயணிகள் நிழற்குடை கட்டித்தரப்படுமா?
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலையில் அதியமான் கோட்டை, கரியாம்பட்டி, ஓலப்பாளையம் ,நல்லிக் கோவில், ஒரம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரிவு சாலை எதிரே அரசு பஸ்கள் நின்று செல்கிறது. இங்கிருந்து மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது வெயில் மற்றும் மழை பெய்து வருதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புன்னம்சத்திரம்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் வழியாக திருக்காடுதுறை, கரைப்பாளையம் பகுதிக்கு செல்வதற்காக போடப்பட்ட சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தவுட்டுப்பாளையம்.
வீடுகளுக்குள் செல்லும் மழைநீரால் அவதி
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் தார் சாலையின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது .புதிய பாலம் கட்டுவதற்காக பாலத்தை ஒட்டி மண் சாலை அமைக்கப்பட்டு மண்சாலையின் அடியில் குழாய் பதிக்கப்பட்டு அந்த குழாய் வழியாக கவுண்டன் புதூர் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் புகலூர் வாய்க்கால் வரை சிறிதாக நெடுகிலும் பொக்லைன் மூலம் குழி பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக வரும்போது வேகமாக வெளியேறி செல்ல முடியாமல் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நொய்யல்
தெருநாய்கள் தொல்லை
கரூர் மாவட்டம், குளித்தலை நகரப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குளித்தலை