'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-22 18:45 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தை எச்சரிக்காத பலகை

ெநல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா செட்டிகுளம் புதுமனை விலக்கில் அபாயகரமான சாலை வளைவில் அமைக்கப்பட்டு இருந்த எச்சரிக்கை பலகையில் இருந்த எழுத்துகள் முழுவதுமாக அழிந்து விட்டது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. ஆபத்தை எச்சரிக்காத வகையில் உள்ள அந்த எச்சரிக்கை பலகையை மீண்டும் முறையாக எழுதி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

அம்பை- தென்காசி மெயின் ரோட்டில் இருந்து அய்யனார்குளத்துக்கு செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் நீண்ட நாட்களாக வடியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

தெருவிளக்கு தேவை

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கடம்பன்குளம் பகுதியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அருகில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-மணிகண்டன், கடம்பன்குளம்.

குண்டும் குழியுமான சாலை

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் கல்லறை தோட்டம் அருகில் இருந்து சாந்திநகர் விலக்கு வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-சுந்தரம், பாளையங்கோட்டை.

பயணிகளை தவிக்க விடும் பஸ்கள்

நாகர்கோவிலில் இருந்து திசையன்விளை வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் பஸ்கள் இரவு 9 மணிக்கு பிறகு திசையன்விளை பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் காமராஜர் சிலை அருகிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் காத்து நிற்கும் வெளியூர் பயணிகள் பஸ்சில் செல்ல முடியாமல் இரவில் தவிக்கும் நிலை உள்ளது. எனவே திசையன்விளை பஸ் நிலையத்துக்கு இரவிலும் அனைத்து பஸ்களும் முறையாக வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-முருகன், திசையன்விளை.

சாலையோரம் குவிந்த மண்

ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம்- யாக்கோபுரம் சாலையோரமாக மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் குவிந்த மண்ணை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

-சுப்பையா, சங்கனாபுரம்.

ஆபத்தான வாறுகால் பாலம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கிராமம் இந்து நகரில் வாறுகால் பாலத்தில் ஓட்டை விழுந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே ஆபத்தான வாறுகால் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-லட்சுமிகாந்தன், ஆத்திகுளம்.

பஸ்கள் சரியாக இயக்கப்படுமா?

நெல்லையில் இருந்து ஏரல் வழியாக ஆத்தூருக்கு காலை 6.15 மணி மற்றும் இரவு 10 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. இதனால் அந்த பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்து பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே பஸ்சை உரிய நேரத்தில் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-முருகன், ஏரல்.

எலும்புக்கூடான மின்கம்பம்

கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் மீனாட்சிநகர் 1-வது தெருவில் உள்ள மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் எந்த நேரமும் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-காளிராஜ், கோவில்பட்டி.

சுகாதார வளாகம் தேவை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த அனைத்து சுகாதார வளாகங்களும் இடிக்கப்பட்டுள்ளன. இதனால் கழிப்பிட வசதி இல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும், குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். தனியார் சுகாதார வளாகங்களில் பலமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே பக்தர்கள் வசதிக்காக உடனடியாக தற்காலிக சுகாதார வளாகம் ஏற்படுத்தி தர வேண்டுகிறேன்.

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

வழிகாட்டி பலகை வேண்டும்

நவதிருப்பதி தலங்களில் பிரசித்தி பெற்ற தலமான இரட்டை திருப்பதிக்கு ஏரலில் இருந்து செல்லும் வழியில் மங்கலகுறிச்சி, மேலமங்கலகுறிச்சி மற்றும் மங்களபுரம் பகுதிகளில் வழிகாட்டு பலகைகளோ, தூரத்தை குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளோ இல்லாததால் பக்தர்கள் வழி தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பகுதிகளில் அறிவிப்பு பலகை அமைத்து தரும்படி கேட்டு கொள்கிறேன்.

-வீரமுத்துராஜ், ஸ்ரீவைகுண்டம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தென்காசி மாவட்டம் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

சேதமடைந்த மின்கம்பம்

கடையம் யூனியன் தர்மபுரம்மடம் பஞ்சாயத்து அழகப்பபுரம் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

மின்விபத்து அபாயம்

பழைய குற்றாலம் விலக்கில் இருந்து திருமலைபுரம் விலக்கு வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களின் கிளைகள் உயர் அழுத்த மின்கம்பிகளில் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன் மின்விபத்துகளும் நிகழ்கிறது. எனவே உயர் அழுத்த மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-கண்ணன், கேளையாபிள்ளையூர்.

பாலம் அமைக்கப்படுமா?

கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டியில் சாலையோரம் வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மையம், தபால்துறை அலுவலகம், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றுக்கு வாறுகாலை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகாலை கடந்து செல்லும் வகையில் சிறிய பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-இசக்கித்துரை, குலசேகரப்பட்டி.

சுகாதாரக்கேடு

குருவிகுளம் யூனியன் காரிசாத்தான் பஞ்சாயத்து பாறைப்பட்டி ஊருணியில் கழிவுநீர் சேருவதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-காளீசுவரன், பாறைப்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

திருவேங்கடம் பஜாரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக செல்கிறவர்களை நாய்கள் விரட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறான தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-நவநித் சிரஞ்சீவி, திருவேங்கடம்.

Tags:    

மேலும் செய்திகள்