'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-07 18:45 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லையை அடுத்த ராமையன்பட்டி விலக்கில் இருந்து சங்குமுத்தம்மாள்புரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதாக முத்துகுமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலகத்தின் மீது சாய்ந்த மரக்கிளை

நெல்லை டவுன் கிராம நிர்வாக அலுவலகம் பழமைவாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் உள்ள வேப்ப மரக்கிளையானது கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மீது சாய்ந்தவாறு நிற்கிறது. இதனால் கட்டிடம் வலுவிழுந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மரக்கிளையை வெட்டி அகற்றி, கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அருணாசலம், நெல்லை.

குண்டும் குழியுமான சாலை

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் குளம் போன்று தேங்குவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-சுந்தர், பாளையங்கோட்டை.

சாலை, வாறுகால் வசதி தேவை

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து மேல விஜயாபதி வடக்கு தெருவில் மழைநீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ரூபான், விஜயாபதி.

* முக்கூடல் கம்பளத்தார் தெருவில் வாறுகால் வசதி இல்லாததால், தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்குகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

-ஆறுமுககுமார், முக்கூடல்.

தெருவில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு

நெல்லை அருகே தேவர்குளம் ஆர்.சி. கோவில் கிழக்கு பகுதியில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளன. இதனால் வாறுகாலில் கழிவுநீர், மழைநீர் நிரம்பி, தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்புகளை அகற்றி, கழிவுநீ்ர், மழைநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-பிரபாகர், தேவர்குளம்.

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்

சேரன்மாதேவி- கொழுமடை ரோட்டில் இரவில் ஏராளமான கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-பழனிசாமி, சேரன்மாதேவி.

ஆபத்தான மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கிழக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-திருப்பதி, குலசேகரன்பட்டினம்.

சேதமடைந்த சாலை

கோவில்பட்டி புது கிராமம் செல்லும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-பாலமுருகன், கோவில்பட்டி.

* எட்டயபுரம் அருகே எத்திலப்பநாயக்கன்பட்டியில் நான்குவழிச்சாலை அருகில் உள்ள சர்வீஸ் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சர்வீஸ் ரோட்டை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-விஜய்குமார், எத்திலப்பநாயக்கன்பட்டி.

உயர்கோபுர மின்விளக்கு அவசியம்

காயல்பட்டினம் அழகிய மணவாள பெருமாள் கோவில், மெய்கண்ட சிவன் கோவில், கணபதி ஈசுவரர் கோவில் ஆகியவற்றின் முன்பு போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-சண்முகவேல், காயல்பட்டினம்.

வாறுகால் கான்கிரீட் மூடிகள் சேதம்

குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து 8-வது வார்டு கொத்துவா பள்ளிவாசல் வடக்கு மெயின் பஜாரில் சாலையோரம் வாறுகாலின் மீது அமைக்கப்பட்ட கான்கிரீட் மூடிகள் உடைந்த நிலையில் உள்ளன. மேலும் வாறுகாலில் குப்பைக்கூளமாக உள்ளதால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி, கான்கிரீட் மூடிகளை புதிதாக அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-தாஹிர், குலசேகரன்பட்டினம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி; சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு

தென்காசி அருகே குணராமநல்லூர் பஞ்சாயத்து புல்லுகாட்டுவலசை பால்பண்ணை தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் இருப்பதாக அகிலன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியைச் சுற்றிலும் புதிதாக கான்கிரீட் அமைத்து சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஒளிராத தெருவிளக்குகள்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் மெயின் ரோடு நாலுமுக்கு பகுதி, ஆற்றங்கரை தெரு, பள்ளிவாசல் அருகில் மையவாடி ரோடு போன்ற இடங்களில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-அகமது அலி பாதுஷா, பொட்டல்புதூர்.

ஆபத்தான தரைமட்ட பாலம்

செங்கோட்டை- பிரானூர் பார்டர் மெயின் ரோட்டில் நகராட்சி எல்லையில் சாலையோர வளைவில் ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஓடைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கவும், அங்கு எச்சரிக்கை பலகை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

கடையின் மீது சாய்ந்த இரும்பு கம்பம்

கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து தெருவில் வாறுகாலில் அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு இரும்பு கம்பமானது அங்குள்ள கடையின் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான இரும்பு கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

சாலையில் ராட்சத பள்ளம்

திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் யூனியன் செட்டிகுளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-சுப்பிரமணியன், செட்டிகுளம்.

Tags:    

மேலும் செய்திகள்