தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பெயர் பலகை வைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தின் 3 நுழைவுப்பகுதிகளிலும் ஊரின் பெயர் பலகை வைக்கப்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பெரிதும் குழப்பம் அடைகின்றனர். மேலும் துறையூர்-பெரம்பலூர் மெயின் ரோட்டில் இருந்து லாடபுரம் செல்லும் சாலையில் குறுகிய பாலம் உள்ளது. அங்கேயும் எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் வளைவுப்பகுதியில் ஒளிரக்கூடிய அறிவிப்பு பலகைகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராம், லாடபுரம்.
தெருநாய்கள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெரு நாய்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்தில் சென்று கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
முகமது பாரூக், வி.களத்தூர்.
வேகத்தடை வேண்டும்
பெரம்பலூர் நகரப்பகுதியில் உள்ள வெங்கடேசபுரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் தினமும் 3-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்கவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
மணிகண்டபிரபு, பெரம்பலூர்
சுகாதார வளாகம் தேவை
பெரம்பலூர் தாலுகா அலுவலகம் அருகே ஆத்தூர் சாலையில் புதிதாக நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆத்தூர், வீரகனூர், கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், பூலாம்பாடி, நெற்குணம், கைகளத்தூர், வெண்பாவூர், நெய்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் அலுவல் வேலை, கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக அதிக எண்ணிக்கையில் பஸ்களில் வந்து ஆத்தூர் சாலையில் உள்ள புதிய நிழற்குடை பகுதியில் இறங்கி செல்கின்றனர். மேலும் சிலர் பஸ்சுக்காக இந்த நிழற்குடையில் காத்தும் கிடக்கின்றனர். இந்தநிலையில் பயணிகள் அவசரத்திற்கு இயற்கை உபாதையை கழிக்க இப்பகுதியில் சுகாதார வளாகம் ஏதுமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை பகுதியில் சுகாதார வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
கூடுதல் மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் இரவு நேரத்தில் செல்வதற்கு போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய போதுமான மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குன்னம்.