தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-01 14:33 GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரத்தில் தனியார் மண்டபம் அருகே உள்ள பகுதியில் மின்கம்பம் ஒன்று சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்பு கூடாக காணப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து பொதுமக்களின் சார்பில் கோரிக்கையாக அனுப்பபட்ட செய்தி கடந்த 26-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டியில் படத்துடன் பிரசுரமானது. இதனை கண்ட சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அந்த எலும்பு கூடான மின் கம்பத்தை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை நட்டனர். இதற்கு நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் ஏற்கனவே இருந்த மின் கம்பத்தில் தெரு விளக்கு இருந்தது. ஆனால் புதிய மின் கம்பத்தில் தெரு விளக்கு இல்லை. எனவே மின் கம்பத்தில் தெரு விளக்கு போடவும் மின்வாரியம் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பஸ் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியிலிருந்து அரும்பாவூர், வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூருக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களின் தேவைக்காக அரசு டவுன் பஸ் காலை 9 மணி அளவில் இயக்க வேண்டும். அந்த நேரத்தில் சரியான பஸ் போக்குவரத்து இல்லாததால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பூலாம்பாடி.

தேங்கி நிற்கும் மழைநீர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் கடந்த ௨ நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பாம்பு , பூரான் தேள் உள்ளிட்ட விஷ ஐந்துகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் நோய் பரவும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீர் செல்ல வடிகால் வசதி வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குன்னம்.

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதல் பாலகட்டை வரை உள்ள சிமெண்டு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயகற்று காணப்படுகிறது. மேலும் சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், நாட்டார்மங்கலம்.

புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு செங்கோல் நகர் எதிரே உள்ள ராயல் நகரில் உள்ள 2 தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சேறு சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

-பொதுமக்கள், பெரம்பலூர்.

Tags:    

மேலும் செய்திகள்