தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-24 16:30 GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், வாங்கப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியின் எதிரே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் நேரில் சென்று அந்தப்பகுதியை பார்வையிட்டார். பின்னர் தூய்மை பணியாளர்கள் அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், காதப்பாறை.

உழவர் சந்தையில் இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை உழவர் சந்தைக்குள் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை உழவர் சந்தைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று காய்கறி வாங்கி விட்டு வெளியே வருவார்கள். ஆனால் சிலர் மோட்டார் சைக்கிளிலேயே உழவர் சந்தைக்குள் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. வயது முதிர்ந்த நடக்க முடியாத நிலையில் இருப்பவர்களை அனுமதிப்பதில் தவறு ஏதுமில்லை. ஆனால் நல்ல நிலையில் இருப்பவர்கள் உழவர் சந்தைக்குள் நடந்து வந்தே தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்லும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றால் பலருக்கு இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்.

பொதுமக்கள் குளித்தலை.

ஆபத்தான புளியமரம்

கரூர் மாவட்டம், குளித்தலை மணத்தட்டை தேவதானம் அருகில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய ஆலமரம் ஒன்று காய்ந்து எப்போது வேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான புளியமரத்தை வெட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குளித்தலை

பயனற்று கிடக்கும் நிழற்குடை

கரூர், காமராஜ் மார்க்கெட் பகுதியில் உள்ள நிழற்குடையின் உள்ளே சிலர் வாழை மரக்கட்டுகள் மற்றும் தேவையில்லாத பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் பயணிகள் உட்காருவதற்கும், நிற்பதற்கும் இடம் இல்லை. எனவே, பயணிகளும், பொதுமக்களும் இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. பொதுமக்களுக்காக கட்டப்பட்ட இந்த நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கரூர்

மயானத்தை சீரமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே குளத்துப்பாளையத்தில் அப்பகுதியை சேர்ந்த இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் அப்பகுதியில் மயானம் கட்டப்பட்டது. இந்நிலையில் மயானம் முழுவதும் பல்வேறு வகையான செடி கொடிகள் முளைத்து இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மயானத்தில் முளைத்துள்ள பல்வேறு செடி கொடிகளை அகற்றி மயானத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குளத்துப்பாளையம்.

Tags:    

மேலும் செய்திகள்