தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்குகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சாத்தனூர் கிராமத்தில் தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இரவு நேரத்தில் இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சாத்தனூர்.
ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும்
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து அரணாரை மற்றும் செஞ்சேரி எல்லை வரை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை அகலப்படுத்தப்பட்டு மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெப்பக்குள வடக்குகரையில் (பழையசந்தைபேட்டை) தொடங்கி தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி அருகே உள்ள சாரணர் இயக்க வளாகம் வரையில் இரவு நேரங்களில் அதிக இருட்டாக உள்ளதால், வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்துசெல்வல கடினமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்களில் சென்றுவரும் பொதுமக்களின் வசதிக்காக மையத்தடுப்புகளில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகளை நகராட்சி நிர்வாகம் அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரணாரை.
குண்டும், குழியுமான சாலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிராமத்தில் தார் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சிறுகன்பூர்.
பயணியர் நிழற்குடை கட்டப்படுமா?
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து திருச்சிக்கும், தொழுதூர், லெப்பைக்குடிகாடு, வேப்பூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிக்கும் அரசு ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் தினந்தோறும் சென்று வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லை. பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் மழை, வெயில் இருகாலங்களிலும் திறந்தவெளியில் காத்திருந்து பஸ் ஏறிசெல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி பயணியர் நிழற்குடையை நகராட்சி நிர்வாகம் உடனே அமைத்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துறைமங்கலம்.
போனஸ் தொகை வழங்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் செயல்படும் இரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், சுமார் 300 விவசாயிகள் தினந்தோறும் 5,500 லிட்டர் பால் ஊற்றி வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படவேண்டிய போனஸ் தொகையை கடந்த 11 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கத்திலிருந்து வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். பால் வள கூட்டுறவு துறை அதிகாரிகள் போனஸ் வழங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இரூர்.
விவசாயிகள் அவதி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கத்தில் தலைவர் மற்றும் செயலாளர் கடந்த ஓர் ஆண்டுகளாக இல்லை. இதனால் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கடன் மற்றும் இதர சேவைகள் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பசும்பலூர்.