தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, மதனத்தூர் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை சிலர் ஆக்கிரமித்து, வீடு கட்டி வருகின்றனர். இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மதனத்தூர்.
மின்கம்பம் சரி செய்யப்படுமா?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், தழுதாழை மேடு ஊராட்சி, மங்க தேவநல்லூர் 3-வது வார்டில் உள்ள ஒரு மின்கம்பம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் நட்டு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மங்கதேவநல்லூர்.
ஆபத்தான குடிநீர் தொட்டி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி 20-வது வார்டு கரடிகுளத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் தொட்டிக்கு செல்லும் படிக்கட்டுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் அருகில் உள்ள மின்மோட்டாரும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கரடிகுளம்.
வேகமாக செல்லும் லாரிகளால் விபத்து
அரியலூர் மாவட்டம், வி.கைாகட்டிக்கு தெற்கே அமைந்துள்ளது மு.புத்தூர் கிராமம். இங்கு தனியார் சுண்ணாம்பு கல் சுரங்கம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து லாரிகள் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக் கொண்டு தினமும் மங்கட்டான், சேலத்தார் காடு, நாமங்கலம்பிரிவு வழியாக அதிக பாரத்துடன் மின்னல் வேகத்தில் செல்கிறது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் லாரிகள் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி.
சாலையின் நடுவே பள்ளம்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதுராகுடிசல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள சாலை இருபுறமும் சாக்கடை வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல சாலையின் நடுவே சிமெண்டு கான்கிரீட்டால் மூடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுப்பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுராகுடிசல் நடுத்தெரு வழியாக செல்ல வாகனங்கள் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த பெரிய பள்ளத்தை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி