'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-04 20:18 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 9-வது வார்டு முகமது சாலிகாபுரம் 2-வது தெரு கடைசி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சிகள் பெயர்ந்து, காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டு இருந்தது. இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய்லானி என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சேதம் அடைந்த மின்கம்பத்தை சீரமைத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

கன்னியாகுமரி-திருச்செந்தூர் சாலையில் ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து தோட்டவிளை விலக்கில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில் நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

நெல்லை ராமையன்பட்டி கிராமம் முத்துநகர் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த குடிநீர் குழாய் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர் மக்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிெசய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

சுரேஷ், டவுன்.

பஸ் நிலையம் அமையுமா?

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். சுரண்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், தேவர்குளம் ஆகிய முக்கிய நகரப்புறங்களின் மைய பகுதியாக ஊத்துமலை உள்ளது. போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைத்துள்ளன. தினமும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பொதுமக்கள், அரசு ஊழியர்கள் நலன் கருதி இந்த பகுதியில் பஸ் நிலையம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மிஸ்பா, ஊத்துமலை.

குண்டும், குழியுமான சாலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-எட்டயபுரம் ரோடு சிவில் சப்ளை குடோன் எதிர்புறம் உள்ள மூக்கணபிள்ளையார் கோவில் தெருவில் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மணிகண்டன், கோவில்பட்டி.

பக்தர்கள் அவதி

திருச்செந்தூர் புளியடி மாரியம்மன் கோவில் எதிரே சாலையோரம் உள்ள பாைதயில் வீடுகள், கடைகள் அதிகம் இல்லாததால் சிலர் அந்த பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். ஆகவே, பக்தர்கள் வசதிக்காக அந்த பகுதியை சீரமைக்க வேண்டுகிறேன்.

முத்துக்குமார், திருச்செந்தூர்.

பராமரிப்பு இல்லாத கிணறு

கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் முத்துராமலிங்க தேவர் காலனி பிள்ளையார் கோவில் அருகில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு பராமரிப்பு இல்லாமல் மோசமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கிணற்றில் கடந்த 4 நாட்களாக நாய் விழுந்து தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. மேலும், மழைக்காலங்களில் கடுமையாக துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, இந்த கிணற்றை தூர்வாரி பராமரிக்க கேட்டுக்கொள்கிறேன்.

தேவராஜ், வடக்கு திட்டங்குளம்.

உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுமா?

சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலம் கிராமத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் உள்ளனர். அவர்களின் வசதிக்காக உடற்பயிற்சி கூடம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆனந்தராஜ், செந்தியம்பலம்.

Tags:    

மேலும் செய்திகள்