தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுத்தமான குடிநீர் வேண்டும்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கடந்த சில நாட்களாக சுகாதாரமான நிலையில் உப்பாக வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் காசு கொடுத்தும் குடிநீர் வாங்கி உபயோகப்படுத்தும் நிலை உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், திண்ணியம்.
சாலை வசதி செய்து தரப்படுமா?
திருச்சி மாவட்டம், போசம்பட்டி பஞ்சாயத்து சல்லாரி காடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து மெயின் சாலைக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. இதனால் குறுகலான மண்சாலையில் மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் சென்று வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே குறுகலான மண்சாலையை விரிவுபடுத்தி தார் சாலையாக போட்டு தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், சல்லாரி காடு
கிணற்றை சுத்தம் செய்ய கோரிக்கை
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தண்டலை புத்தூர் ஊராட்சி வேளக்காநத்தம் கிராமம் கிழக்கு காலனியில் பாழந்தடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை சுத்தம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வேளக்காநத்தம்.
அடர்வனக் காடுகள் அமைக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வடக்கு தத்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான நிலப்பரப்பு மாரியம்மன்கோவில் அருகில் சுமார்10 ஏக்கர் உள்ளன. தமிழகத்தில் மியவாக்கி திட்டத்தின் கீழ் அடர்வன காடுகளை அமைக்கும் பொருட்டு நிறைய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
மழைவளம் பெறவும், மரங்கள் நிறைந்த வனத்தை அமைக்கும் பொருட்டும் வடக்கு தத்தமங்கலத்தில் அடர்வனக்காடுகளை உருவாக்க
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், வடக்கு தத்தமங்கலம்
வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி மாநகராட்சி உலகநாதபுரம், கல்லுக்குழி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மேற்கண்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், உலகநாதபுரம்