விவசாயியை கொலை செய்த கறிக்கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை

விவசாயியை கொலை செய்த கறிக்கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2022-12-13 18:34 GMT

கடன்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 39), விவசாயி. மேலும் ஆடுகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்தார். பங்களாபுதூரை சேர்ந்தவர் மாரியப்பன் (59), கறிக்கடைக்காரர். இவரிடம் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி சரவணன் ஆடுகளை விற்பதாக கூறி ரூ.30 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

இதையடுத்து மாரியப்பன் மறுநாள் சரவணனிடம் சென்று ஆடுகளை கேட்டுள்ளார். அதற்கு சரவணன் பணமாக கொடுத்து விடுகிறேன். ஆடுகளை தரமுடியாது என மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாரியப்பன், ஆடு வெட்டும் கத்தியால் சரவணனை குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.

ஆயுள் தண்டனை

இதையடுத்து குளித்தலை அரசு மருத்துவமனையிலும், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்தவழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில், மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்