பச்சைமலை அடிவார கிராமங்களில் அதிகரிக்கும் பூக்கள் சாகுபடி

பச்சைமலை அடிவார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிகரித்துள்ளது.

Update: 2022-11-11 19:19 GMT

பூக்கள் சாகுபடி

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக திகழும் பச்சைமலை அடிவாரத்தில் சில ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வயல்வெளிகள் பசும்போர்வை போன்று பரந்து விரிந்து கிடக்கிறது. இதில் லாடபுரம், அம்மாபாளையம், அரசலூர், அன்னமங்கலம், ஈச்சங்காடு, களரம்பட்டி, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் மரவள்ளி, வெங்காயம், நெற்பயிர்களுடன் சம்பங்கி அதிக அளவிலும், மல்லிகை, கோழிக்கொண்டை பூக்கள் கணிசமான அளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக லாடபுரத்தில் சம்பங்கி மலர் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.

தினமும் நள்ளிரவில் 100 பேர் முதல் 250 பேர் வரை கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல பூ பறிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பறிக்கப்படும் சம்பங்கி உள்ளிட்ட பூக்களை சாக்கு முட்டைகளில் கட்டி சரக்கு ஆட்டோக்களில் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுக்கும், பெரம்பலூரில் உள்ள மொத்த வியாபாரத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. லாடபுரம் சம்பங்கி பூக்கள் ரெங்கநாத பெருமாளையும் அலங்கரிக்கின்றன என்பது கூடுதல் சிறப்பாகும்.

வாசனை திரவிய தொழிற்சாலை

சம்பங்கி பூ சாகுபடி குறித்து லாடபுரத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி:-

சம்பங்கி பூவின் விதைக்கிழங்கை வயல்களில் ஊன்றினால் செடி வளர்ந்து மொட்டு விடுவதற்கு 6 மாதங்கள் ஆகும். அதைத்தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தினமும் கேந்திப்பூ மலரும். இதனை தினமும் பறித்து பூ மார்க்கெட்டுக்கு அனுப்ப முடியும். சம்பங்கி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நள்ளிரவு 1 மணிக்கு தூக்கத்தை இழந்து, நெற்றியில் அணியும் டார்ச் விளக்குடன் வயலில் இறங்கி அதிகாலை 4 மணி வரை சம்பங்கி பூக்களை பறித்து, பெரம்பலூர், ஸ்ரீரங்கம் பூக்கள் சந்தை மற்றும் பெரம்பலூர் மொத்த விற்பனை கடைகளுக்கு அனுப்பி வருகிறோம். நள்ளிரவில் பனி மற்றும் விஷ ஜந்துகள், பூச்சி தொல்லைகளுக்கு இடையே பூக்களை கொய்து அனுப்பி வருகிறோம். ஆனால் எங்களது உழைப்பிற்கு ஏற்ற கொள்முதல் விலை கிடைப்பதில்லை. தற்போது குறைந்தபட்சம் சம்பங்கி பூக்கள் கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மழை சீதோஷ்ண நிலையில் கோழிக்கொண்டை குறைந்த பரப்பிலேயே சாகுபடி செய்யப்படுகிறது.

நவராத்திரி விழாக்காலங்களில் ஆயுதபூஜை தினத்தையொட்டி சம்பங்கி அதிகபட்சமாக ரூ.380-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. சுபமுகூர்த்த நாட்களின்போது கொள்முதல் விலை சற்று அதிகரிக்கிறது. மலர் சாகுபடியாளர்களுக்கு நிரந்தரமாக நிலையான வருமானம் இல்லை. ஆகவே இந்த நிலையை தமிழக முதல்-அமைச்சர் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் நறுமணப்பொருட்கள்- வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கொள்முதல் விலை கிடைப்பதில்லை

மயிலூற்று அருவி அருகே சம்பங்கி சாகுபடி செய்து வரும் விவசாயி பெருமாள்:-

சம்பங்கி பூ சாகுபடியில் அதிக பராமரிப்பு இல்லாததால், லாடபுரம் பகுதி விவசாயிகள் அதிக அளவில் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். சில ஆண்டுக்கு முன்பு சம்பங்கி சாகுபடி தற்போதைய சாகுபடி பரப்பைவிட குறைவாக இருந்தது. கொள்முதல் விலையும் ஓரளவு கிடைத்து வந்தது. தற்போது சம்பங்கி மலர் சாகுபடி பரப்பு சுமார் 500 ஏக்கர் வரை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வயலில் ஒரு பகுதியில் சம்பங்கி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஊக்கமும், மானிய உதவிகளும் அளித்தால், இப்பகுதியில் மலர்கள் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தகுந்த கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்திட முன்வந்தால், பூக்கள் சாகுபடி விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். மழை, கொட்டும் பனி, நள்ளிரவு நேரம் என்று பாராமல் சம்பங்கி பூக்களை பறித்து வருகிறோம். சமீபத்தில் பூக்கள் பறிப்பதற்கான கூலி மட்டுமே எங்களுக்கு கணிசமான வருமானமாக கிடைக்கிறது. ஆனால் சம்பங்கி பூக்களுக்கு சரியான கொள்முதல் விலை கிடைப்பதில்லை. கோவில் விழாக்கள், சுபமுகூர்த்த தினங்களையொட்டி அலங்கார வேலைகளுக்கு சம்பங்கி பூக்கள் பயன்பாடு அதிகம் இருப்பதால், அந்த சமயங்களில் ஓரளவுக்கு கொள்முதல் விலை கிடைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்