சேலம் அய்யந்திருமாளிகையில் உருக்குலைந்து வரும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சேலம் அய்யந்திருமாளிகையில் உருக்குலைந்து வரும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சேலம்,
வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்
சேலம்-ஏற்காடு சாலையில் அய்யந்திருமாளிகை உள்ளது. இங்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் கடந்த 1982-ம் ஆண்டு 754 கான்கிரீட் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அடுக்குமாடியாகவும், தனியாகவும் உள்ள இந்த வீடுகளில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு சலுகையுடன் வீட்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் தொடக்கத்தில் அரசு ஊழியர்கள் குடியிருப்புகளில் வசிக்க ஆர்வம் காட்டினர். ஆனால் நாளடைவில் குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகள் சரியாக மேற்கொள்ளவில்லை. மேலும் 6-வது ஊதியக்குழுவின்போது வீட்டு வசதி வாரியம் வீட்டு வாடகையை பல மடங்கு உயர்த்தியதால் பலரும் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு செல்ல தொடங்கினர்.
உருக்குலைந்து வருகிறது
அதாவது வெளி இடங்களை விட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு வாடகை அதிகரித்து இருந்ததால், அங்கு குடியிருந்த பலர் வீடுகளை காலி செய்து விட்டனர். இதனால் பூட்டப்பட்ட வீடுகளை கவனிக்காததால் அந்த வீடுகள் எல்லாம் பாழடைந்து வருகிறது. பல வீடுகளில் மேற்கூரை கான்கிரீட் உடைந்தும், சுவர்கள் விரிசல் ஏற்பட்டும், கதவு, ஜன்னல்கள் உடைந்தும் காணப்படுகிறது. பெரும்பாலான வீடுகளின் முன்புறம் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளிக்கிறது.
இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இரவில் கொசுக்களின் படையெடுப்பால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு வீடுகள் கட்டி இந்தாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது 80 சதவீத வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், எனவே உருக்குலைந்து வரும்வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
குடியிருக்க தயங்கும் அதிகாரிகள்
இது ஒருபுறம் இருக்க, அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் அய்யந்திருமாளிகை, கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் பங்களா, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் குடியிருப்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பு, மாவட்ட முதன்மை நீதிபதி பங்களா, பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் பங்களா, மாவட்ட வருவாய் அலுவலர் வீடு, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மத்திய சிறைச்சாலை, பெண்கள் கிளை சிறை, வனத்துறை அதிகாரிகளின் வீடுகள் உள்பட மாவட்டத்தில் முக்கியமான உயர் அதிகாரிகளின் வீடுகளும் உள்ளன. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பரபரப்பாக காணப்படும். அய்யந்திருமாளிகை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்தால் அரசு அலுவலகங்களுக்கு எளிதில் சென்றுவிடலாம் என்று வெளிமாவட்டங்களில் இருந்து இடமாறுதலாகி வரும் அரசு அதிகாரிகள் நினைப்பார்கள்.
ஆனால் வீடுகள் பழுதடைந்து காணப்படுவதால் அங்கு குடியிருக்க அதிகாரிகள் தயங்கி வருவதாகவும், இதனால் தங்களுக்கு வசதியான இடங்களில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அதிகாரிகள் செல்வதாகவும் கூறப்படுகிறது. எனவே, பாழடைந்து வரும் குடியிருப்புகளை சீரமைக்க வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும் என அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுக்கு வருவாய் இழப்பு
இதுகுறித்து ஓய்வு பெற்ற சுகாதாரத்துறைஅலுவலர் பெரியசாமி:-
நான் 1997 முதல் 2003-ம் ஆண்டு வரை அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தேன். அப்போது, வீட்டு வாடகை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே இருந்தது. அதன்பிறகு வாடகை உயர தொடங்கிவிட்டது. தற்போது ஓய்வு பெற்றுவிட்டதால் வள்ளலார் நகரில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறேன். வாடகை உயர்வு, பராமரிப்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வீடுகளை காலிசெய்துவிட்டனர். இதனால் 80 சதவீத வீடுகள் காலியாக இருக்கிறது. இதனால் அரசுக்கு தான் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த குடியிருப்புகளை முழுவதும் இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டினால் வாடகைக்கு அரசு ஊழியர்கள் வருவார்கள்.
சமூக விரோதிகளின் கூடாரம்
வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் டிரைவர் கார்த்திக்:-
வீட்டுவசதி வாரிய வீடுகள் கட்டியதில் இருந்து இதுவரை ஒன்றுகூட சீரமைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான வீடுகள் புதர்மண்டி கிடக்கிறது. இந்த பகுதியில் திருமண மண்டபம் இருப்பது கூட தெரியாமல் செடி, கொடிகள் முளைத்துள்ளது. அதை பயன்படுத்த முடியாத நிலையில்உள்ளது. வீடுகள் காலியாக இருப்பதால் இரவு நேரங்களில் சிலர் வெளியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், காலி பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். சமூக விரோதிகளின் கூடாரமாக வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் மாறிவிட்டன. எனவே 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதால் குடியிருப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இடிந்து விழும் நிலையில் உள்ளது
அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சையது பாஷா:-
பெயருக்கு தான் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அனைத்து வீடுகளும் பழுதடைந்து காணப்படுகிறது. ஜன்னல், கதவுகள், கான்கிரீட் தளம் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே குடியிருக்க முடியாத வீடுகளை கணக்கெடுத்து அவற்றை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட வேண்டும். அப்போது தான் அரசு ஊழியர்கள் வருவார்கள். ஏ, பி, சி, டி என நான்கு வகையான குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகையான வீட்டிற்கும் தனித்தனி வாடகை உண்டு. அய்யந்திருமாளிகை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆட்டோ ஸ்டேண்டில் தான் எனது ஆட்டோவை நிறுத்தியுள்ளேன். ஆரம்பத்தில் இங்கிருந்து வாடகைக்கு செல்வேன். ஆனால் தற்போது யாரும் ஆட்டோவில் வருவது கிடையாது. இதனால் வருமானம் இல்லை. இருப்பினும், வேறு இடத்திற்கு செல்ல முடியாது என்பதால் இங்கேயே ஆட்டோவை ஓட்டி வருகிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல், வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் அய்யம்பெருமாம்பட்டியில் 114 வீடுகளும், சங்ககிரியில் 60 வீடுகளும், மேட்டூரில் 120 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இங்கும் பழுதடைந்து பராமரிப்பு இல்லாத வீடுகளை கணக்கெடுத்து அவற்றை சீரமைக்கவும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.