கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-01-29 19:00 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே இரவில் கடும் குளிரும், பகலில் மிதமான வெப்பநிலையும் காணப்படுகிறது. அதேபோல் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் கொடைக்கானலில் அலைமோதியது. அதிகாலையிலேயே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். கொடைக்கானலில் நேற்று காலை முதலே பலத்த காற்று வீசியது. தொடர்ந்து பகல் நேரத்தில் கடும் வெப்பம் சுட்டெரித்தது. மாலையில் மேகக்கூட்டம் தரையிறங்கி மலை முகடுகளை வருடிச்சென்றன. இவ்வாறு மாறி வந்த பருவ நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். அத்துடன் மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் பரிசல் சவாரி, ஜிப்லைன் சாகச விளையாட்டில் ஈடுபட்டு உற்சாகம் அடைந்தனர்.

இதேபோல் பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட்டும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கினர். இதற்கிடையே வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களில் வாகன நிறுத்தும் இடம் மற்றும் கழிப்பறை வசதிகள் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். எனவே சுற்றுலா இடங்களில் கழிப்பறை வசதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்