ஈரோடு ரெயில்-பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
ஈரோடு ரெயில்-பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
தொடர் விடுமுறை எதிரொலியாக ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறை
மிலாது நபி, சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் அதைத்தொடர்ந்து காந்தி ஜெயந்தி விழா என அடுத்தடுத்து விடுமுறை வருகிறது. இதேபோல் பள்ளிக்கூடங்களில் காலாண்டு தேர்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் குவிந்து வருகிறார்கள்.
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதலே பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவு நேரங்களில் தொலைதூரம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சென்னை செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் கூட்டம்
இதேபோல் கரூர், சேலம், கோவை செல்லும் பஸ்களிலும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவில் பஸ்சுக்காக காத்திருந்த சில பயணிகளிடம் பணத்தை திருடிச்சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இதனால் ஈரோடு பஸ் நிலையத்தில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை மற்றும் இரவு நேரங்களில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன் பதிவு பெட்டிகள் நிரம்பி வழிந்தன. மேலும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் இடம் பிடிக்க பயணிகளிடம் கடும் போட்டி நிலவியது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் ரெயில் நிலையத்தில் குவிந்ததால் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. பொதுமக்கள் விடுமுறையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.