சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்:
தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறை
பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி நேற்று அதிகாலையிலேயே கன்னியாகுமரி, பத்மநாபபுரம், திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், முட்டம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று அதிகாலையில் திரண்ட சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அந்த சமயத்தில் தங்களது செல்போன்களில் படம் பிடித்து உற்சாகம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்றனர்.
திற்பரப்பு அருவி
தற்போது திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. திற்பரப்புக்கு நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர், கேரள மாநில சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தந்தனர். அவர்கள் உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியின் மேற்பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையில் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை ரசித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் திற்பரப்பில் போக்குவரத்து ெநருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாைலயோரம் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க திற்பரப்பு பஞ்சாயத்து நிர்வாகமும், போலீசாரும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனையை காணவும் வாகனங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் அரண்மனையின் வெளிப்புற அழகையும், உள்புற அறைகளின் பிரமாண்டம், மேற்கூரை போன்றவற்றில் கலை அழகோடு செதுக்கப்பட்டிருந்த மரசிற்பங்கள், மன்னர்கள் போரில் பயன்படுத்திய ஆயுதங்கள் போன்றவற்றை கண்டு ரசித்ததோடு, குடும்பமாக நின்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரிகோட்டை, முட்டம், பேச்சிப்பாறை அணை, வட்டக்கோட்டை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.