கடலூரில் கோடை விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
கடலூர் சில்வர் பீச் சில் நடந்த கோடை விழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நேற்று முன்தினம் நெய்தல் கோடை விழா தொடங்கியது. இதையொட்டி சில்வர் பீச்சில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கு வசதியாக ராட்டினம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல்வேறு குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் நெய்தல் கோடை விழா தொடங்கியது. 2-வது நாளான நேற்று மாலை 4.30 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. மேலும் கடற்கரையில் பாராசூட்டில் பறக்கும் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
பட்டிமன்றம்
மேலும் கடலூர் அரசு பெரியார் கல்லூரி மாணவர்களின் நடனம், சிலம்பம், பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், போதை ஒழிப்பு மற்றும் செல்போன் குற்றம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் பரதம், கரகம் மற்றும் சிலம்பமும், நடன நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் மாலை 6.40 மணிக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத்தின் சொற்பொழிவும், இரவு 7.40 மணியளவில் பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தம் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது.
அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்த விழாவை காண கடலூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் திரண்டு வந்தனர். இதனால் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மேற்பார்வையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.