ஆமை வேகத்தில் நடைபெறும் கிராசிங் பணிகள்
நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் கிராசிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் கிராசிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
டவுன் ரெயில் நிலையம்
கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டவுன் ரெயில் நிலையம் தற்போது குமரி மாவட்ட மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறது. இதேபோல திருச்சி இன்டர்சிட்டி ரெயிலும் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் டவுன் ரெயில் நிலையத்தில் கிராசிங் வசதி இல்லை. மாறாக கிராசிங் நிலையமாக 19 கிலோ மீட்டர் தூரத்தில் இரணியல் ரெயில் நிலையமும், மறு மார்க்கத்தில் 16 கிலோ மீட்டர் தொலைவில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையமும் உள்ளது. இந்த 2 ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் கிராசிங் வசதி இல்லை. அந்த வகையில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழிப்பாதையாக உள்ளது.
கிராசிங் பணிகள்
இதனால் ஆரல்வாய்மொழியில் அனந்தபுரி ரெயில் புறப்பட்டு விட்டால் நாகர்கோவில் டவுன் வந்து இரணியல் செல்லும் வரை வேறு எந்த ரெயிலும் இந்த வழியாக இயக்க முடியாது. அதாவது சுமார் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த மார்க்கத்தில் ரெயில்கள் இயக்க முடியாது. இந்த காரணமாக ரெயில்கள் அதிக நேரம் நாகர்கோவில் சந்திப்பு, இரணியல், குழித்துறை, பாறசாலை ஆகிய ரெயில் நிலையங்களில் கிராசிங்கிற்காக நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை.
இந்த நிலையில் இரட்டை ரெயில் பாதை பணிகள் தொடங்கப்பட்ட பிறகு டவுன் ரெயில் நிலையத்தில் பழைய இருப்பு பாதையில் தொழில்நுட்ப குறைபாடு இருந்ததால் புதிய பாதை அமைத்து அதில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது வரை பழைய பாதையில் தொழில்நுட்ப குறைபாட்டை சரி செய்ய எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.
ஆமை வேகத்தில்...
இதனால் கிராசிங் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கிராசிங் பணிகள் மெதுவாக நடைபெறுவதால் நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் பல்வேறு ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் கிராசிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.