தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்கள்; விவசாயிகள் கண்ணீர்
தியாகதுருகம், சின்னசேலம் பகுதிகளில் தண்ணீா் இன்றி பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.;
தியாகதுருகம்,
பயிர் சாகுபடி
தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இந்த நிலையில் தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் பகுதியை சுற்றியுள்ள நயினார்பாளையம், புக்கிரவாரி, கூகையூர், அலம்பலம், கீழ்குப்பம், பெத்தானூர், பாகம்பாடி, பெத்தாசமுத்திரம், சிறுமங்கலம், காலசமுத்திரம், கிருஷ்ணாபுரம், இந்திலி, அசகளத்தூர், கருங்குழி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், மக்காச்சோளம், கரும்பு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனா். அவற்றுக்கு ஏரி, கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகிறார்கள்.
குறைந்த நீர்மட்டம்
இந்நிலையில் பருவமழை பெய்யாததாலும், ஏரிகள், விவசாய கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து போனதாலும் விளை நிலங்களில் சாகுபடி செய்த மக்காச்சோளம், மணிலா உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்.
இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீா் இன்றி கருகி வருகிறது. அதிக செலவு செய்து, இரவு பகல் பாராமல் பராமாித்து வந்த பயிர்கள், தங்கள் கண் முன்னே கருகி வருவதை பார்த்து விவசாயிகள் தினமும் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.
காய்ந்து வரும் பயிர்கள்
இதுகுறித்து புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், பருவமழையை நம்பி தியாகதுருகம், சின்னசேலம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், மணிலா போன்ற பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியும், இன்னும் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் ஏரிகள், விவசாய கிணறுகளின் நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.
இதனால் தற்போது மக்காச்சோளம், மணிலா உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது.
விவசாயிகள் வேதனை
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீா் இன்றி காய்ந்து வருவதால், செலவிடப்பட்ட தொகையாவது கிடைக்குமா என தெரியவில்லை என்றனர்.
எனவே இப்பகுதி விவசாயிகளின் வேதனையை போக்க வருண பகவான் கருணை காட்டுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.