பயிர் அறுவடை பரிசோதனைக்கு இடையூறு செய்தால் குற்றவியல் நடவடிக்கை

பயிர் அறுவடை பரிசோதனைக்கு இடையூறு செய்தால் குற்றவியல் நடவடிக்கை

Update: 2023-01-10 18:45 GMT

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைக்கு இடையூறு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் அறுடை பரிசோதனை

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில சம்பா, தாளடி பயிரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிட 2,256 பயிர் அறுவடை பரிசோதனைகள் ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 இடங்களில் புள்ளியியல் துறையினால் வழங்கப்பட்ட எதேச்சை எண் மூலம் சர்வே எண் கண்டறியப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தநிலையில் சில கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை மேற்கொள்ளும் வேளாண், வருவாய், புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவன அலுவலர்கள் வரும் போது அக்கிராமத்து விவசாயிகள் அத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் இடத்தில் சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் சாகுபடிதாரரும், வேளாண், புள்ளியியல், வருவாய்த்துறை மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவர்.

குற்றவியல் நடவடிக்கை

இதை தவிர வேறு எந்தவொரு அலுவலரோ, விவசாயிகளோ அல்லது தனி நபர்களோ இருந்தால் பயிர் அறுவடை பரிசோதனை நடத்த இயலாமல் அச்சோதனை பயிர் காப்பீட்டு நிறுவனத்தினால் ஆட்சேபிக்கப்படும். இதனால் மேற்படி கிராமத்திற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க இயலாத நிலை ஏற்படும். பயிர் அறுவடை பரிசோதனைக்கு ஏதாவது இடையூறுகள் விளைவித்தால் அத்தகைய நபர்கள் மீது குற்றவியல் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்களில் நடைபெறவுள்ள பயிர் அறுவடை பரிசோதனையினை சரியான முறையில் நடத்திட அனைத்து தரப்பினரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்