விபத்தில் வாலிபர் பலி
*திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 26). இவரும் இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (21) என்பவரும் நேற்று முன்தினம் மாலை சஞ்சீவி நகரில் இருந்து டவுன் ஸ்டேஷன் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் சாைலயோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நாகேந்திரன் பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த சரவணன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாடிய 7 ேபர் கைது
*மணிகண்டம் அருகே உள்ள கொழுக்கட்டைகுடி கிராமத்தில் பணம் வைத்து சூதாடியதாக ஆவூரை சேர்ந்த பாட்ஷா மொய்தீன் (58), கொழுக்கட்டைகுடி முருகன் (37), திருப்பதி (33), பிச்சைமுத்து (35), பொன்னுச்சாமி (33), கமல் (29), இந்திரகுமார் (37) ஆகிய 7 பேரை மணிகண்டம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரு.1500/- பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரெயில்வே ஊழியர் சாவு
*திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கல்லணை ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசலு (56). இவர் பொன்மலை ரெயில்வேயில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் திருவெறும்பூர் கல்லணை சாலையில் உள்ள பயணியர் நிழற்குடையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
*முசிறி அருகே உள்ள சேந்தமாங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவர் தனது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக முசிறி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி தற்கொலை
*மணப்பாறையை அடுத்த ஆணையூரை சேர்ந்தவர் துரைக்கண்ணு (48). தொழிலாளியான இவர் குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயில் கருகி மூதாட்டி பலி
*துவரங்குறிச்சி அருகே உள்ள எம்.இடையபட்டியை சேர்ந்தவர் கருப்பாயி (63). இவர் நேற்று முன்தினம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சேலையில் தீப்பிடித்து உடலிலும் பற்றிக்கொண்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மர்மசாவு
*ஸ்ரீரங்கம் கீழவாசல் வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கோகிலாம்பாள் (32) இவர் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
*திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலை குடியிருப்பை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 37). இவர் பாய்லர் ஆலையில் பணியாற்றி வருகிறார். ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கடந்த 21-ந்தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் துரைராஜிக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் வீட்டுக்கு வந்து பார்வையிட்டதில் வீட்டில் இருந்த 5½ பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பாய்லர் ஆலை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.