பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
*சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான வைரமணி (19), சந்துரு ஆகியோர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த 3 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
விதவை பெண்ணை கொடுமைப்படுத்தியவர் கைது
*திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ரபீக்ராஜா (42). இவருக்கும், இவரது நண்பரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரபீக்ராஜாவின் நண்பர் இறந்துவிட்டார். இதனால் அந்த பெண் தனது மகளின் எதிர்காலம் கருதி ரபீக்ராஜா உடனான தொடர்பை துண்டித்து கொண்டார். இதனிடையே ரபீக்ராஜா அந்த பெண்ணை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி வலியுறுத்தி கொடுமை செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரபீக்ராஜாவை கைது செய்தனர்.
கைப்பை திருட்டு
*ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாரத்கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (65). இவர் தனது கைப்பையில், செல்போன், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரூ.700 ஆகியவற்றை வைத்து தனது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் தொங்கவிட்டு சென்று கொண்டிருந்தார். மூலத்தோப்பு பகுதியில் உள்ள மாம்பழக்கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர் மாம்பழம் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டு இருந்த செல்போன் இருந்த கைப்பையை மேலூர் நடுத்தெருவை சேர்ந்த பாபு (57) என்பவர் திருடி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
*திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48). மேலப்புதூரில் உள்ள ஒரு ஓட்டல் முன் நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளை திருடியதாக பீமநகரை சேர்ந்த சீமோன்கிஷோர் (23) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு
*திருச்சி சண்முகாநகரை சேர்ந்தவர் கககராஜ். இவருடைய மனைவி சாந்தி (41). கட்டிட தொழிலாளர்கள். சம்பவத்தன்று சீனிவாசாநகர் 5-வது வீதியில் உள்ள டீக்கடையில் பெஞ்சில் அமர்ந்து சாந்தி டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய செல்போனை அருகில் வைத்திருந்தார். அவரது செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்ற, திருச்சி செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் கார்த்தி (19) என்பவரை அப்பகுதியினர் உதவியுடன் சாந்தி பிடித்து உறையூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆடு திருடியவர் கைது
*புத்தானத்தம் அருகே உள்ள முடுக்குப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (45). இவர் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், சேரனூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (38) மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடி சென்றார். இது தொடர்பாக புத்தானத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.கிரை