கோவை மேற்கு மண்டலத்தில் கொலை குற்றங்கள் குறைந்து உள்ளன

கோவை மேற்கு மண்டலத்தில் கொலை குற்றங்கள் குறைந்து இருப்பதாக போலீஸ் ஐ.ஜி. சுதாகர் கூறினார்.

Update: 2022-11-22 19:23 GMT

புறக்காவல் நிலையம்

நாமக்கல் நல்லிபாளையம் மேம்பாலம் அருகில் புறக்காவல் நிலையம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவரிடம் குற்ற நடவடிக்கைகளை குறைக்கும் பொருட்டும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் நாமக்கல் நகர பகுதியில் 253 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், தற்போது வேகமாக செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் வகையில் 6 அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 6,627 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக அவர் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டு, ஆயுதப்படை கவாத்து அணிவகுப்பை பார்வையிட்டு, காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கொலை குற்றங்கள் குறைவு

பின்னர் போலீஸ் ஐ.ஜி.சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கொலை குற்றங்கள் குறைந்து உள்ளது. குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மண்டலங்களை ஒப்பிடும் போது அதிக அளவில், குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் கையாளப்பட்டு வருகிறது. இதேபோல் குற்றச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மேலும் போக்குவரத்து போலீசார் மூலம், சாலை விபத்துகளை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்