பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய கடன் உதவி முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் கடன் உதவி முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-10 18:45 GMT


திருவாரூர் மாவட்டத்தில் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் கடன் உதவி முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் உதவி திட்டங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சீயர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்தவர்களும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் இதர தொழில் செய்வதற்கு பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடன் உதவி பெறுவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.

இந்த கடன் முகாம் வருகிற 15-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.

தொழில் திட்ட அறிக்கை

முகாமில் விண்ணப்பத்துடன் சாதிசான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்கள் மற்றும் கடன் பெறும் தொழில் திட்ட அறிக்கை முதலிய ஆவணங்களுடன் கீழ்கண்ட இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளாவில் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

15- ந் தேதி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, திருவாரூர், நன்னிலம் கிளையிலும், 16- ந்தேதி குடவாசல், வலங்கைமான் ஆகிய கிளையிலும், 17- ந் தேதி தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி, நீடாமங்கலம் கிளையிலும், 24- ந் தேதி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை கிளையிலும், 25- ந்தேதி தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி, கூத்தாநல்லூர், மன்னார்குடி கிளையிலும் நடக்கிறது.

சிறுபான்மையினர் நல அலுவலகம்

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருவாரூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கியினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்