அழியும் நிலையில் உள்ள ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பை உருவாக்குக- ராமதாஸ்

தமிழகத்தில் சிதறிக் கிடக்கும் ஓலைச்சுவடிகளை தேடிப்பிடித்து பதிப்பிக்க தனி அமைப்பு ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டுமென ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-05-21 06:02 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது;

தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் கணிதவியல், வானியல், சித்த மருத்துவவியல், தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 10 லட்சம் ஓலைச்சுவடிகள் கேட்பாரின்றி கிடக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. சுவடி நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பண்ணையார்களின் இல்லங்கள் போன்றவற்றில் கிடக்கும் இவை உடனடியாக மீட்டெடுத்து பதிப்பிக்கப்படவில்லை என்றால் அடுத்த சில ஆண்டுகளில் அழிந்து விடக்கூடும் என்று சுவடியியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களின் எச்சரிக்கை தமிழக அரசால் செவிமடுக்கப்பட வேண்டும்!

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களை தமிழ் இலக்கிய உலகம் கொண்டாடுவதற்கான காரணம் தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் சிதறிக்கிடந்த தமிழ் இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளை தேடித்தேடி சேர்த்து பதிப்பித்து இலக்கிய நூல்களாக வெளியிட்டது தான். உ.வே.சா மட்டும் இல்லாமல் போயிருந்தால் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஐங்குறுநூறு போன்ற புகழ்பெற்ற தமிழ் இலக்கியங்கள் நமக்கு கிடைத்திருக்காது. இப்போது தமிழகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் ஓலைச்சுவடிகளை கண்டறிந்து பதிப்பித்தால் நமக்கு இன்னும் சிறப்பான தமிழ் இலக்கியங்கள் கிடைக்கலாம்; இதுவரை விடை காணப்படாத கணிதப்புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்; பல நோய்களுக்கு தமிழ் மருத்துவத்தில் மருந்து கிடைக்கலாம். இதை சாதிப்பதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டு விடக்கூடாது.

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகள் கருவூலமாகக் கிடைக்கும் நிலையில், அவற்றை படிக்கவும், படி எடுக்கவும், பதிப்பிக்கவும் தெரிந்த வல்லுனர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும், இப்போது தமிழகத்தில் அத்தகைய திறமை பெற்றவர்கள் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், பல அரிய தமிழ்ப் படைப்புகள் நமக்கு கிடைக்காமலேயே போய்விடும். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க சுவடியியல் வல்லுனர்களைக் கொண்டு சுவடிகளை படிப்பதற்கும், படி எடுக்கவும், பதிப்பிக்கவும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அதனிடம் உள்ள சுவடிகளை மட்டும் தான் பதிப்பித்து வருகிறது. அந்தப் பணியை தமிழாராய்ச்சி நிறுவனம் முடிப்பதற்கு இன்னும் வெகுகாலம் ஆகலாம். எனவே, தமிழ்நாடு முழுவதும் சிதறிக் கிடக்கும் ஓலைச்சுவடிகளை தேடிப்பிடித்து பதிப்பிக்க தனி அமைப்பு ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும். மிகவும் தேவையான, அரிய பணியை செய்வதற்காக அந்த அமைப்புக்கு போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்