மாடுகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் கன்றுவீச்சு நோய்

Update: 2023-02-08 17:25 GMT


மாடுகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய கன்று வீச்சு நோயைத் தடுக்கும் வகையில் கால்நடைத்துறை மூலம் குமரலிங்கம் பகுதியில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நச்சுயிரி

புரூசெல்லா எனப்படும் பாக்டீரியாவினால் பரவக் கூடிய புரூசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய் மிகக் கொடிய நோயாக கருதப்படுகிறது.

இது ஆடு, பன்றி மற்றும் மாடுகளைத் தாக்கி 7 மாதத்தில் கருச்சிதைவு ஏற்படச் செய்யும்.காளைகளில் விரை வீக்கத்தை ஏற்படச் செய்யும். அந்த காளைகளை இயற்கை முறை கருவூட்டலுக்கு பயன்படுத்தும்போது சினையூட்டப்படும் பசுக்களுக்கும் நோய் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் நஞ்சுக்கொடி, ரத்தம் மற்றும் பால் மூலம் நச்சுயிரி வெளியேறுகிறது.

இந்த நஞ்சுக்கொடி மற்றும் ரத்தத்தை சுத்தம் செய்வதாலும், பாலை நன்கு காய்ச்சாமல் குடிப்பதாலும் இந்த நோய் மனிதர்களுக்கு பரவக் கூடும். இந்த நோய் மனிதர்களைத்தாக்கும் போது அதிக காய்ச்சல், கை கால் வலி மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இந்த நோயைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி செலுத்தவேண்டியது அவசியமாகும்.அதன்படி 4 முதல் 8 மாதங்களுக்கு உட்பட்ட கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் தடுப்பூசி போடுவதன் மூலம் அதன் வாழ்நாள் முழுவதும் இந்த நோய்க்கான எதிர்ப்புத் திறன் கிடைக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி

அதன்படி குமரலிங்கம் கால்நடை மருந்தக கட்டுப்பாட்டு கிராமங்களில் 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 50 கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமில் உடுமலை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜெயராம், திருப்பூர் நோய் புலனாய்வுப்பிரிவு உதவி இயக்குனர் கௌசல்யா, குமரலிங்கம் கால்நடை உதவி மருத்துவர் கார்த்திகேயன், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு மருத்துவர் சிவக்குமார், கால்நடை ஆய்வாளர்கள் பத்மா, கார்த்திக் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காந்திஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்