போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

லெட்சுமாங்குடி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-05-15 18:45 GMT

கூத்தாநல்லூர்:

லெட்சுமாங்குடி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்-மன்னார்குடி சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி சாலை, திருவாரூர், மன்னார்குடி வழித்தடம் சாலை ஆகும். இதனால் இந்த சாலையில் தினமும் திருவாரூர், மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை மற்றும் ஏனைய ஊர்களுக்கு சென்று வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், லாரி, கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்த சாலையில் கீழபனங்காட்டாங்குடி தொடங்கி, லெட்சுமாங்குடி கடைவீதி வரை உள்ள சாலையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் தினமும் சுற்றித்திரிகின்றன. இதனால் பகல் நேரங்களில் சாலையில் மாடுகள் நிற்கும்போது வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருவது வாடிக்கையாகி விட்டது. என்றாலும் இரவு நேரங்களில் அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து இடையூறு

இதனால் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் நிற்பது எளிதில் தெரிவதில்லை. மேலும் மாடுகள் நிற்பது தெரிந்து வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினாலும் அந்த மாடுகள் ஓரமாக செல்லாமல் சாலையிலேயே நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும், வாகனங்கள் வேகமாக வரும் போது திடீரென மாடுகள் சாலையில் குதித்து அங்கும் இங்குமாய் ஓடும் போது வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படுகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கண்டாலே வாகன ஓட்டிகள் அதிர்ச்சியும் பதற்றமும் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிகளவில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்