மாலையை தாண்டிய மாடுகள்
செந்துறை அருகே, மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாலையை மாடுகள் தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.
செந்துறை அருகே பெரியூர்பட்டியில் ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த 5-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படுகிற மாடுகள் மாலையை தாண்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு, பக்தர்கள் கொண்டு வந்த மாடுகள் மந்தைகளில் இருந்து ஒவ்வொன்றாக கோவில் முன்பு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவைகளுக்கு பூைஜ நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொத்துகொம்பு என்னுமிடத்துக்கு அனைத்து மாடுகளும் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கிருந்து கரடு முரடான பாதை வழியாக மாடுகள் கோவிலை நோக்கி விரட்டி கொண்டு வரப்பட்டன. மாடுகளுடன், ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். பின்னர் மாலையை தாண்டும் நிகழ்ச்சியில், தரையில் போடப்பட்டிருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர். இதில் 200 மாடுகள் பங்கேற்றன. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாடுகள் கவுரவிக்கப்பட்டன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.