குற்றாலம் சாரல் திருவிழா ஆலோசனை கூட்டம்
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் குற்றாலம் சாரல் திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் குற்றாலம் சாரல் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சாரல் திருவிழா
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. நேற்று குளிர்ந்த காற்று வீசியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் சாரல் திருவிழா நடைபெறவில்லை. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு மாவட்டத்தின் முதல் சாரல் திருவிழா இந்த ஆண்டு வருகிற ஆகஸ்டு முதல் வாரத்தில் நடத்தப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டம்
சாரல் திருவிழா நடத்தப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கவிதா, மாவட்ட திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) குருநாதன், உதவி சுற்றுலாத்துறை அலுவலர் நித்திய கல்யாணி, கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தென்காசி உதவி கலெக்டர் கங்கா தேவி, குற்றாலம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி (பொறுப்பு) மாணிக்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கூட்டத்தில் கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-
இந்த சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் கலை அரங்கில் ஒரு வாரம் நடத்தப்பட உள்ளது. கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, தோட்டக்கலை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தினமும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகளுக்கு நடத்தி தர வேண்டும். நீச்சல் போட்டி, நாய் கண்காட்சி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, தப்பாட்டம், பரதநாட்டியம், பல்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை சிறப்பாக நடத்தப்பட வேண்டும். காவல்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.