மருத்துவ செலவை வாலிபருக்கு வழங்க வேண்டும்

உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மருத்துவ செலவை வாலிபருக்கு வழங்க வேண்டும் என காப்பீடு நிறுவனத்துக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-27 18:45 GMT

குமாரபாளையம் அருகே ஈ.காட்டூர் புதுக்காலனியை சேர்ந்த ஜெயமணி மகன் ரவி (வயது 33). இவர், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.1,753 செலுத்தி காப்பீடு நிறுவனம் ஒன்றில் மருத்துவ காப்பீடு செய்தார். 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனத்திடம் கேட்டார். அதற்கு, 24 மணி நேரம் உள்நோயாளியாக இருந்தால் மட்டுமே பணம் வழங்க முடியும் என்று காப்பீடு நிறுவனம் கூறியது. இதையடுத்து 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விவாதம் முடிந்து ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ராமராஜ் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், காப்பீட்டு நிறுவன சேவை குறைபாடு நிரூபிக்கப்பட்டுள்ளதால் ரவிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், மருத்துவ செலவு தொகை ரூ.13,353 என ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 353-ஐ 4 வார காலத்துக்குள் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரவி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இழப்பீடு வழங்கப்படும் நாள் வரை ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 353-க்கு, 9 சதவீத வட்டி சேர்த்து ரவிக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்