காலி செய்து இடத்தை ஒப்படைக்காததால் உழவர் சந்தைக்கு வந்த கோர்ட்டு ஊழியர்கள்

காலி செய்து இடத்தை ஒப்படைக்காததால் உழவர் சந்தைக்கு வந்த கோர்ட்டு ஊழியர்கள் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-01 18:52 GMT

வாடகை செலுத்தவில்லை

பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் திருச்சி விற்பனைக்குழு சார்பில் உழவர் சந்தை கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உழவர் சந்தையில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களான காய்கறிகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

மார்க்கெட்டை விட விலை குறைவாக இருப்பதால் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் பலர் வந்து காய்கறிகள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர். ஆனால் உழவர் சந்தை அமைந்துள்ள இடத்திற்கு குத்தகை ஒப்பந்தம் மூலம் வாடகை கோவிலுக்கு கொடுக்கப்படாமலும், ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமலும் தொடர்ந்து இயங்கி வந்தது.

கோர்ட்டில் வழக்கு

இதனால் கடந்த 2004-ம் ஆண்டு கோவிலின் செயல் அலுவலர் சார்பில் பெரம்பலூர் முதன்மை மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அந்த இடத்திற்கு வாடகை பாக்கியும், உழவர் சந்தை கட்டிடத்தை இடித்து காலி செய்து இடத்தை மனுதாரரிடமும் கொடுக்குமாறு விற்பனைக்குழுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து விற்பனைக்குழு தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவினை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை அமல்படுத்தக்கோரி கோவில் செயல் அலுவலர் சார்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வாடகை பாக்கி தொகை விற்பனைக்குழு சார்பில் காசோலை மூலம் மனுதாரருக்கு அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

விவசாயிகள் அச்சம்

ஆனால் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பின் படி மனுதாரருக்கு உழவர் சந்தையை காலி செய்து கொடுக்குமாறும், அதன் அறிக்கையை கடந்த 29-ந் தேதிக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறும் கூறியிருந்தது. ஆனால் உழவர் சந்தையை காலி செய்து இடத்தை கொடுக்காததால் நேற்று கோர்ட்டு ஊழியர்கள் உள்ளிட்டோர் உழவர் சந்தைக்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் உழவர் சந்தையை இடிக்க வந்ததாக எண்ணி விவசாயிகள் அச்சமடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் விவசாயிகள் பயன்பெறும் உழவர் சந்தையை தக்க வைத்து கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கலந்து ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்