படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியும்

Update: 2023-01-24 16:46 GMT


பல்லடம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் போதை பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் பொங்கலூர் கஸ்தூரி ரங்கப்பநாயுடு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வக்கீல் சுதாகர் வரவேற்றார். பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்தானகிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.வடிவேல், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின் போது நீதிபதிகள் பேசியதாவது:-

போதை பொருள் பயன்பாடு குடும்பத்தை மட்டுமின்றி இந்த சமூகத்தையும் மிகக்கடுமையாக பாதிக்கிறது. அரசு மற்றும் நீதிமன்றத்தால் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வியாபார நோக்கத்திற்காக பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் விற்பனை ஆங்காங்கே உள்ளது. எனவே போதைப் பொருட்களை முழுமையாக ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

பெண் குழந்தைகள் மீது தவறான தொடுதல் செய்யும் நபர்களை அச்சமின்றி உங்கள் பெற்றோர்களிடம் கூறி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டோம் என்று படிப்பை தொடராமல் விட்டுவிடக்கூடாது. நீங்கள் தொடர்ந்து படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்.

முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியர் பொ.சிவக்குமார் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வக்கீல்கள் தினகரன், வினோத்குமார், பிரகதீஸ்வரன், அருண் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்