கச்சத்தீவு விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பின்படி மத்திய அரசு செயல்படும்
கச்சத்தீவு விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பின்படி மத்திய அரசு செயல்படும் என்று எச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடி,
கச்சத்தீவு விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பின்படி மத்திய அரசு செயல்படும் என்று எச்.ராஜா தெரிவித்தார்.
பேட்டி
காரைக்குடியில் பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கச்சத்தீவு குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்தநிலையில் கச்சத்தீவு குறித்து நான் கருத்து ஏதும் கூற முடியாது. கச்சத்தீவு விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்புப்படி மத்திய அரசு செயல்படும். கச்சத்தீவினை இலங்கைக்கு கொடுக்கும்போது அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் அதை எதிர்க்கவில்லை.
பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு 20 வருடம் முன்பாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த செயல் இந்திய மீனவ மக்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.வின் கூட்டணி கட்சி காங்கிரஸ் செய்த துரோகம். சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு நினைத்தாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. சர்வதேச ஒப்பந்தத்தை நாம் நினைக்கும்போது ரத்து செய்ய முடியாது. அதற்கு அந்த நாட்டிலும், பேசி சம்மதம் வாங்க வேண்டும்.
கண்டிப்பு
எனவே இது தொடர்பாக தவறான கருத்துக்களை யாரும் தமிழக மக்களிடம் பரப்ப வேண்டாம். அர்ஜுன் சம்பத் கைது ஜனநாயக விரோத, எதேச்சதிகாரமான நடவடிக்கை. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் குலாம் நபி ஆசாத் கூறியது போல் ஆமாம் சாமி போடுபவர் களுக்கு மட்டும்தான் இடம் உள்ளது. அடிமைகளுக்கான கட்சியாக அது மாறிவிட்டது. ஒருவர் கட்சியை விட்டு எதற்காக விலகி சென்றார் என்பதை கூற வேண்டும் அல்லவா, அதைத்தான் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.